அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் மரணம் தொடர்பான விசாரணையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 ரவுடிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் என்பவர் நடைபயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்
இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று 2-வது கட்ட விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்தனர்
மேலும் இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை நடத்தி அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய காலம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் சில குற்றவழக்குகளில் தொடர்புடைய 15 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. எனவே, ராஜ்குமார், சத்தியராஜ், நரைமுடி கணேசன் உள்ளிட்ட 13 பேர் கடந்த 1 ஆம் தேதி திருச்சி குற்றவியல், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த விசாரணையில் 13 பேரும் இன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 13 பேரில் 8 பேர் ஒப்புக்கொண்டுள்ளனர். மீதம் 5 பேர் ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மேலும் சிலர் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.