அரபிக்கடலில் காற்றழுத்த தாய்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனுடன் தற்போது அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தருமபுரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு இம்மாதம் கிடைக்க வேண்டிய 9 சென்டிமீட்டர் மழையில், 8 சென்டிமீட்டர் மழை ஏற்கனவே கிடைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வுநிலையால் லட்சதீவு, மாலத்தீவு மறும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், மழை காரணமாக ஏற்கனவே சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் தேங்குவதால் மழை அதிகரித்தால் வெள்ள அபாயம் ஏற்படுமா என்பதற்கு சென்னை மாநகராட்சி பதில் அளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் சென்னையில் ஏற்படாது. 80% மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு அனைத்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.