2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்திருக்கிறது. அந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையலாம் என தெரிகிறது.
திமுகவை பொறுத்தவரை வழக்கம்போல் விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். இதில் தேமுதிக இந்தமுறை யாருடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் விஜயகாந்த் மறைந்து தேமுதிக சந்திக்கவுள்ள முதல் சட்டமன்ற தேர்தல் இது.
தேமுதிகவை பொருத்தவரை அக்கட்சி அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு கடந்த 5ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தபோது 60 சதவீதம் பேர் திமுகவுடன் செல்லலாம் எனவும் 40 சதவீதம் பேர் அதிமுகவுடன் செல்லலாம் எனவும் கருத்து தெரிவித்தார்களாம்.
வருகிற 9ம் தேதி கடலூரில் மாநில மாநாட்டை நடத்த தேமுக திட்டமிட்டது. ஆனால் புயல் காரணமாக மழை வரும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் மாநாடு நடைபெற வாய்ப்பில்லை என்கிறார்கள். அனேகமாக பொங்கலுக்கு பின் இந்த மாநாடு நடைபெறும் எனவும், அந்த மாநாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா அறிவிப்பார் என தெரிகிறது.