தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆறு ராஜ்யசபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு இரண்டு எம்பிக்களும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், திமுகவின் நான்கு எம்பிக்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் உள்ள இரண்டு எம்பிக்களில் ஒரு எம்பி தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, ஒரு ராஜ்ய சபா எம்பி சீட் தருவதாக அதிமுக தங்களுக்கு வாக்குறுதி அளித்தது என பிரேமலதா கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என அதிமுக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை பிரேமலதா சந்தித்தபோது, "ராஜ்யசபா தொகுதி உங்களுக்கு கிடைக்குமா?" என்ற கேள்விக்கு, “பொறுமை கடலினும் பெரிது. தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக விரைவில் அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.