ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கருப்புப் பணத்தை அழிக்க ரூ.500 நோட்டுகளையும் அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடப்பாவில் நடந்த தெலுங்கு தேசக் கட்சியின் மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு. "2016ல் பணமதிப்பிழப்பு கொண்டு வந்தபோது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகமானது. தற்போது ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. இப்போது ரூ.500 நோட்டுகளும் திரும்பப் பெற வேண்டும்," எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, "அதற்கு பதிலாக டிஜிட்டல் நாணயங்களை ஊக்குவிக்க வேண்டும். பல நாடுகள் இதை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளன. நமது நாட்டிலும் இதை விரிவாக நடைமுறைப்படுத்தலாம். கட்சி நிதிகளும் ஆன்லைனில் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்," என்றார்.
மேலும், தேர்தலில் வெற்றிக்காக பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் நம்பிக்கையைப் பெற்றால் வாக்குகள் இயல்பாக வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
2023ல் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தற்போது ரூ.500 நோட்டு மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.