நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்ப்பதாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மணப்பாறையில் நடந்த தே.மு.தி.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜய், முதல்வரை அங்கிள், சார் என்று அழைப்பது அரசியல் நாகரீகமா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வொருவர் பேசும் விதமும் அவரவரின் தனிப்பட்ட பாணி. அவர்கள் ஒரு கணிப்போடுதான் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். அதைப்பற்றி கருத்து சொல்லவோ, அறிவுரை வழங்கவோ, விமர்சிக்கவோ நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார். விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணத்திற்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், விஜயகாந்தின் புகைப்படங்களை மற்ற அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவது குறித்துப் பேசுகையில், "கேப்டன் என்பது கட்சிச் சொத்தோ, குடும்பச் சொத்தோ அல்ல. அவர் தமிழக மக்களின் சொத்து. எனவே, அவருடைய புகைப்படங்களை திரைத்துறையினரோ, அரசியல் தலைவர்களோ பயன்படுத்துவதை நாங்கள் தடுக்க மாட்டோம்,” என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.