சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமின் கீழ் பெறப்பட்ட பொதுமக்கள் மனுக்களை வைகை ஆற்றில் வீசிய வழக்கில், நில அளவை ஊழியர் முத்துக்குமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், திருப்புவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இந்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன
இதுகுறித்த விசாரணையில், அரசு ஆவணங்களை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமரன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சக ஊழியர் ஒருவரின் மீது இருந்த கோபத்தின் காரணமாக, அவரை சிக்கவைக்கும் நோக்கில் இந்த மனுக்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், அரசு பணியாளர்களுக்கிடையிலான தனிப்பட்ட பகையால், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய முக்கியமான ஆவணங்கள் எவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளன என்பதை காட்டுவதாக உள்ளது.