திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள டவுண் பகுதியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்ற சமூக வலைதள வதந்திகளுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
நேற்று, திருநெல்வேலி சந்திப்பு டவுண் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் ஒரு மாணவன் அறிவாளால் வெட்டப்பட்டுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து, "இரு சமூகங்களுக்கு இடையே மோதல்" என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக மாணவர்கள் மோதிக்கொண்டதாகவும், இதற்கு சமூக ரீதியான எந்தக் காரணமும் இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில், சம்பவத்தை மிகைப்படுத்தி செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறும், சமூக பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் காவல்துறை பொதுமக்களையும், ஊடகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.