பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர், தனது கணவர் வீட்டில் இருந்து குடும்ப உறுப்பினர்களால் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இந்த இளம் தம்பதியினர், உறவினர்கள் மற்றும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். இருப்பினும், மாப்பிள்ளைக்கு "சரியான வேலை" இல்லை என்று பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் தங்கள் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே இழுத்து வரப்பட்டு, வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின்போது, தங்களை காரில் ஏற்றியவர்கள் மிளகாய்த்தூள் தூவி, தாக்கியதாகவும் பெண்ணின் கணவரும், அவரது பெற்றோரும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் பெற்றோர் மற்றும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் விசாரணையில், அப்பெண் தான் தனது தந்தையுடன் இருப்பதாகவும், மறுநாள் காவல் நிலையத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்துள்ளார்.