கடந்த சில வருடங்களாகவே காவல்துறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்படுபவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்து வரும் நிலையில், இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போது மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தினேஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மதுரையை சேர்ந்த இளைஞர் தினேஷ் என்பவர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
ஆனால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை மாற்றியுள்ள நிலையில், தற்போது மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ஷீலா என்பவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த வழக்கை சிபிசிஐடி சரியான முறையில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.