பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீடிக்கும் உட்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் சின்னமான மாம்பழம் முடக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் எச்சரித்துள்ளது.
முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதற்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில், "கட்சியின் தலைவர் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். தேர்தல் வரை மோதல் நீடித்தால், இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது. மாறாக, கட்சியின் சின்னம் முடக்கி வைக்கப்படும்" என்று தெளிவுபடுத்தப்பட்டது.
இறுதியில், பாமகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று கூறிய நீதிமன்றம், ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. உட்கட்சிப் பூசலால் மாம்பழச் சின்னம் முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.