கடந்த பல மாதங்களாகவே பாமக நிறுவனர் ரமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். பாமக கூட்டத்திலேயே ராமதாஸ் மேடையில் இருக்கும் போது அன்புமணி கோபத்தை காட்டிய வீடியோ கூட வெளியானது. அதன்பின் அன்புமணி மீது தொடர் குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறி வந்தார்.
எனது மனைவியை அன்புமணி அடிக்க வந்தார். அவருக்கு பொறுமை இல்லை. தலைமை பண்பு இல்லை, தொண்டர்களை வழிநடத்த தெரியவில்லை, என் வாழ்க்கையில் நான் செய்து மிகப்பெரிய தவறு அவரை மத்திய அமைச்சராக்கியது என்றெல்லாம் பேசினார் ராமதாஸ். தற்போது ராமதாஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அன்புமணி ராமதாஸ் ஆதாரவாளர்கள் ஒருபக்கம் என பாமக செயல்பட்டு வருகிறது.
ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணியும் சேர்த்து வைக்க பாமக தலைவர்கள் பல முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. இந்நிலையில்தான் சமீபத்தில் பாமக எம்எல்ஏ அருள் சேலம் அருகே சோக நிகழ்வுக்கு சென்று திரும்பியபோது அவரை அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் தாக்கியதாக வீடியோ வெளியாகி பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மீண்டும் அன்புமணியை தாக்கி பேசியுள்ளார். ஒரு கட்சியிலேயே இருந்தவர்களுக்குள் அடிதடி ஏற்படுத்துகிறார்கள். இதுவரை என் தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறையோ, மோதலோ நடந்ததே இல்லை. துக்கம் விசாரிக்க சென்ற அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிர் பிழைத்திருக்கிறார். இதுவா ஒழுக்கமான மேம்பட்ட அரசியல்? இதுவா நாட்டை வளப்படுத்தும்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் அமைதியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு பிளவு ஏற்பட்டதாக மக்கள் பேசுகிறார்கள். என்னை ஐயா என அன்போடு அழைத்த பிள்ளைகள் அங்கு சென்று அவரின் பேச்சைக் கேட்டு என்னையே திட்டி பேசுகிறார்கள். வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம். அதற்கு நானே பெயர் வைக்கிறேன். அரசியலில் சில தவறுகளை நான் செய்திருக்கிறேன். அதில் ஒன்று அன்புமணியை அமைச்சராக்கியது. இரண்டாவது அவருக்கு கட்சித் தலைவர் பொறுப்பு கொடுத்தது. அன்புமணி செயல்பாடு அருவருக்கத்தக்க வகையில் உள்ளது என்றும் புலம்பியிருக்கிறார் ராமதாஸ்.