பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முருக பக்தர்கள் ஏராளமானோர் பழனி கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். விரதம் இருந்து, வேண்டுதல் செலுத்தவும் பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.
பழனியில் ஏப்ரல் 10ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, அதே நாளில் வெள்ளி தேரோட்டம், ஏப்ரல் 11ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறும். இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவு விழா நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பழனியில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததால், பக்தர்கள் வசதிக்காக கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் திரள வாய்ப்பு இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.