Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

Advertiesment
விஜய்

Mahendran

, செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (11:41 IST)
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
 
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.
 
ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
 
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.
 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
 
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? 
 
ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
 
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.
 
சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
 
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!