இன்று காலை, நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது முதலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று ஓபிஎஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர், ஓபிஎஸ் மீண்டும் முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சரின் மகன் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபிஎஸ்ஸை வாசல் வரை வந்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் இருமுறை முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்திருப்பது, அவர் தி.மு.க.வில் இணைய போகிறாரா அல்லது புதிய கட்சி ஆரம்பித்து தி.மு.க. கூட்டணியில் சேர போகிறாரா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பிறகு, முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திலிருந்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், முதலமைச்சர் சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்றும், அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால், அதே நேரத்தில், "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை" என்றும், "அரசியலில் எனக்கு என்று சுயமரியாதை உள்ளது" என்றும் அவர் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.