ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
"எங்களின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதை தெளிவாக கூறிவிட்டுத்தான் நாங்கள் களத்திற்கு வந்துள்ளோம். அந்த புரிதல் எங்கள் தொண்டர்களுக்கு முழுமையாக இருக்கிறது" என்று விஜய் தெரிவித்தார்.
அதேவேளையில், அதிமுகவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், "2026 தேர்தலில் யார் உண்மையாக களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பவர்களை எல்லாம் எதிர்த்துக்கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை" என்று அதிரடியாக தெரிவித்தார்.
அதிமுகவினர் உரிமை கோரும் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெயர்களைத் தாங்கள் பயன்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார். அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்றும், அவர்களின் பெயர்களை பயன்படுத்த எவருக்கும் தடை விதிக்க உரிமை இல்லை என்றும் கூறினார். தந்தை பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகளில் தேவையான நற்பண்புகளைத் தவெக எடுத்துக்கொள்ளும் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.