தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று மீண்டும் டெல்லியில் ஆஜரானார். அவர் சிபிஐ விசாரணையில் ஆஜர் ஆனதிலிருந்தே பல ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் பல செய்திகளை வெளியிட்டனர். சில ஊடகங்கள் விஜயை கைது செய்யப் போகிறார்கள் எனவும், சில தொலைக்காட்சிகள் விஜயிடம் விசாரணையை மேலும் நீட்டிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டன.
மாலை 4.30 மணி அளவில் விசாரணை முடிந்து விஜய் சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார், அதன்பின் தவெக முக்கிய நிர்வாகி நிர்மல் குமார் டெல்லியிலேயே செய்தியாளர்களை சந்தித்தார். எங்கள் தலைவருக்கான விசாரணை இன்றோடு முடிந்துவிட்டது. கரூர் விசாரணையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.
ஆனால் சில திமுக சார்பான ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் எங்கள் தலைவரை பற்றி பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள்..குறிப்பாக எங்க தலைவர் கைது என்றெல்லாம் செய்தி போட்டார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா சென்னை வந்தபோது கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என சொன்னார். அதைப் பற்றி தொலைக்காட்சிகளில் யாரும் விவாதம் செய்யவில்லை. அந்த நபருக்கு சம்மன் அனுப்பினார்களா என்று யாரும் பேசவில்லை.. ஆனால் எங்கள் தலைவரை பற்றி தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று பொங்கி இருக்கிறார்.