நீட் தேர்வு குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த நிலையில், திமுகவின் நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "திராவிட மாடல் அரசு நாடக அரசு என்பதற்கு இன்னும் ஒரு உதாரணமாக இன்றைய அனைத்து கட்சி அறிவிப்பை பார்க்கிறோம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்றும், நீட் தேர்வின் ரகசியம் எங்களுக்கு தெரியும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றினார் என்பது வெகு தெளிவாக தெரிகிறது.
அகில இந்திய அளவில் நீட் தேர்வை அமல்படுத்துவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கான எந்த வழக்கையும் தாக்கல் செய்யாமல், அரசியல் வாய்ப்புகளுக்காக நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டனர்.
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தப் போவதாக இப்போது கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு குறித்து ஏமாற்று அரசியல் மேற்கொண்ட திமுகவின் நாடகம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது" என்றும் அவர் கூறியுள்ளார்.