இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், இன்று 16 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 5ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், ஏப்ரல் 6 முதல் 8 வரை தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.