தமிழகத்தில் உள்ள 100 கோவில்களில் புத்தக விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புத்தக விற்பனையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, சமயத்தின் நன்னெறிகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லவும், முறையாகப் பாதுகாக்கவும் பதிப்பகப் பிரிவின் மூலம் அரிய பக்தி நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோயில் கலை நூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை இரண்டு கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்ட பக்தி நூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 திருக்கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில், "இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்வதற்கு 103 திருக்கோயவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 100 திருக்கோயில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை செயல்படுத்திடும் வகையில் 100 திருக்கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருக்கோவில் புத்தக விற்பனை நிலையங்கள் துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பதோடு, அவை அறிவுசார் மையங்களாகவும் திகழ்ந்து வருவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா,பொ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.",
Edited by Siva