பிரதமரை அவதூறாக பேசிய தயாநிதிமாறனை கைது செய்யுங்கள் என்றும் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்குங்கள் என்றும் பாஜக பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நீதி ஒதுக்கவில்லை என்று தயாநிதி மாறன் சமீபத்தில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை கேடி என்று கூறியதை அடுத்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
கேடி' என்று மோடியை சொல்கிறார் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் யார் கேடி? சட்ட விரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் இணைத்துகொண்டு சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி பல கோடி ரூபாய் அரசாங்கத்தின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் பிரதமரை கேடி என்று சொல்வது அயோக்கியத்தனம்.
முதல்வர் ஸ்டாலினை இது போன்று பேசியிருந்தால் தமிழக காவல் துறை அடுத்த நொடியே கைது செய்து சிறையிலடைத்திருக்கும். பிரதமர் குறித்து இந்த வார்த்தையை பிரயோகம் செய்தது குற்றச் செயல் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான குற்றம். மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக இந்த நபரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
பிரதமரை தவறாக பேசிய தயாநிதி மாறனை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அவரை கைது செய்து சிறையிலடைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தயாநிதி மாறன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.