கோகைன் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நடிகர் ஸ்ரீகாந்திடம், சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நடிகர் கிருஷ்ணாவுடன் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்ட இந்த வழக்கில், சர்வதேச போதைப்பொருள் கும்பல் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த மென்பொறியாளர் பிரதீப்குமாருக்கு தொடர்பு இருப்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த போதைப்பொருள் சங்கிலியை முன்னாள் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் இயக்கியுள்ளதாகவும், இதில் பல நடிகர், நடிகையருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்கும் அமலாக்கத்துறை, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பியது. அக்டோபர் 29 அன்று நடிகர் கிருஷ்ணா ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில், நவம்பர் 11 அன்று ஆஜரான நடிகர் ஸ்ரீகாந்திடம், அதிகாரிகள் ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் இருக்க, தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.