சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் ஏ. அருண் அவர்கள், மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபர்களை கண்டறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதல் இதுவரை 342 மிரட்டல்கள் பதிவாகியுள்ளன. டார்க் வெப் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் சென்னையை சேர்ந்த இருவர் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சென்னையில் குற்றச்செயல்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். கடந்த ஆண்டைவிட கொலை வழக்குகள் (102ல் இருந்து 82), சங்கிலிப் பறிப்புகள் (35ல் இருந்து 21), மற்றும் கைப்பேசி பறிப்புகள் (275ல் இருந்து 144) வெகுவாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
டெல்லி சம்பவம் காரணமாக மெட்ரோ நிலையங்களில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள அபராதங்கள் வசூலிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையர் கூறினார்.