1993 மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2015ஆம் ஆண்டு முதல் ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் அச்சத்தால் பொதுமக்கள் வாங்க தயங்கினாலும், தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தாவூத் இப்ராஹிமின் சொந்த கிராமமான மகாராஷ்டிரா ரத்னகிரியின் மும்பாக்கேவில் உள்ள அவரது சகோதரி ஹசீனா பார்கர் பெயரில் இருந்த 4 விவசாய நிலங்கள் தற்போது விற்பனைக்கு வந்தன. கடந்த ஆண்டு ஏலம் போகாததால், இந்த முறை சொத்து மதிப்பு 30% குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இருப்பினும், அவற்றை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் மீண்டும் ஏலம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தாவூத் இப்ராஹிமின் கார் ரூ.32 ஆயிரத்திற்கும், மும்பாக்கே கிராம வீடு ரூ.11 லட்சத்திற்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள அவரது பெரும்பாலான சொத்துக்கள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன.