திமுக கூட்டணியில் இடம்பிடிக்க விடுதலைச்சிறுத்தைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் நேற்று நடந்த 'தேசம் காப்போம்' என்ற மாநாடு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர், மேலும் ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு எம்பி கூட இல்லாத கட்சி, தேசத்தை காப்போம் என்ற மாநாடு நடத்துவதும் அதில் அரசியல் கட்சிகள் கலந்து கொள்வதும் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, 'நம் நாட்டிற்கு அந்நிய நாடுகளால் ஆபத்து இல்லை என்றும், இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் ஆபத்து என்றும், பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால் அந்த பட்டத்தை பெருமையோடு பெற்றுக்கொள்வோம் என்றும் பேசினார்.
மேலும் உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் இழைத்து விட்டதாகவும், மற்ற மாநிலத்தில் மோடியை வீழ்த்தும் வேலை மட்டும் தான் ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க அரசையும் சேர்த்து வீழ்த்த வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினார். மேலும் 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரான கொள்கை என்றும், 'ஏழைத்தாயின் மகன்' என தன்னைச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, 'அண்ணல் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றப் போகிறேன்’ என்று கூறுவதை விட அம்பேத்கருக்கு அவமானம் தேடித்தரவேண்டிய வேறு காரியம் ஏதேனும் உண்டா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.