தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் கார்த்திகேயன் சண்முகம் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு ஆண்டுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் அமைச்சராகியுள்ளார். ஆனால், அவரது சகோதரர் அசோக் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் தற்போது திடீரென ஆஜராகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.