நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவதற்காக, இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாது என அதிரடியாக அதிமுக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துவிட்டது. இதனை அடுத்து, அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், நீட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் சட்டதிருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் சட்டமன்றத்தில் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்க, அனைத்து கட்சி தலைவர்களைக் கூட்டி அதில் என்ன முடிவு எடுக்க முடியும்?
பொம்மை முதலமைச்சர் நீட் தேர்வு குறித்து கூறிய பொய் வெளிவந்துவிட்டதை மறைக்கும் விதமாக தற்போது அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.