தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ள நிலையில், மாநாடு நடக்கும் இடத்திற்கு மக்கள் சுற்றுலா செல்வது போல சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பல லட்சம் மக்கள் கூட நடத்தினார். அதை தொடர்ந்து இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மதுரை அருகே பாரபத்தியில் 506 ஏக்கர் நிலத்தில் மாநாட்டிற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை மாநாடு நடைபெற உள்ளது.
ஆனால் இந்த மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் வைத்துள்ள பெண்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் இதய, சுவாச பிரச்சினை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், அவர்கள் வீட்டில் இருந்தே மாநாட்டை டிவியில் காண வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் நேற்று மாநாடு பணிகள் அனைத்தும் நடந்து முடிந்திருந்த நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்ததோடு அங்கு நடைபெற்ற பணிகளையும் கண்டனர். அவர்களை தவெகவினர் வரவேற்று அமர வைத்தனர். தவெகவின் தேர்தல் ஆலோசகரான ஆதவ் அர்ஜூனா மக்களை சந்தித்ததோடு, அனைவரும் மாநாட்டிற்கு நேரில் வர முடியாத நிலை நிலவுவதையும், அவர்கள் அதனால் டிவியில் பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். மக்கள் பலர் மாநாட்டு திடலுக்கு சுற்றுலா வருவது போல வந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K