சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு முக்கிய அரசு அலுவலகங்களுக்கு, இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக, இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் இதேபோன்ற மிரட்டல் வந்தது, அது வெறும் புரளி என பின்னர் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்திற்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும், வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல்களை தொடர்ந்து, இரண்டு அலுவலகங்களிலிருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது, மோப்ப நாய்களின் உதவியுடன் காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது மிரட்டல் புரளியா அல்லது உண்மையா என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.