மதுரையில் இருந்து சென்னை வரை பாஜக நீதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அந்த பேரணிக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ள காவல் துறை, மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி நடைபெற உள்ளது என்று சமீபத்தில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த பேரணி நாளை மதுரையில் தொடங்கி சென்னையில் முடியும் என்றும், தமிழக கவர்னரை சந்தித்து பாஜக மகளிர் அணி சார்பில் மனு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜகவின் நீதிப்பேரணிக்கு மதுரை மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், மீறி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இருந்த நிலையில், அந்த போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல், தற்போது பாஜகவின் நீதிப்பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.