டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்க முலாம் பூசிய கழிவறையை பயன்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா காலத்தில் வளர்ச்சி திட்டங்கள் முடங்கி இருந்தபோது, தனது ஆடம்பர இல்லத்தை புதுப்பிக்க பல கோடி ரூபாய் செலவு செய்ததாக ஏற்கனவே பாஜக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தங்க முலாம் பூசிய கழிவறையை பயன்படுத்துவதாக, டெல்லி பாஜக தலைவர் ஆர்.பி.சிங் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தங்க முலாம் பூசிய கழிவறையை அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டில் பயன்படுத்துகிறார் என்றும், ₹56 கோடி மதிப்புள்ள அவரது மாளிகையில் தங்க முலாம் பூசிய 12 கழிப்பறைகள் உள்ளன என்றும், அதன் மதிப்பு மட்டும் ₹1.44 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.
"இலவசங்களை கொடுத்து வாக்குகளை பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் தவறுகள் குறித்து மக்களிடம் நாங்கள் சொல்கிறோம். இங்குள்ள கழிவறைகளின் நிலையை பாருங்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும் நல்ல கழிப்பறை, குளியலறை கட்டித் தருவோம். இலவசங்களின் பெயரில் டெல்லியை சூறையாட விடக்கூடாது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் கால அறிவிப்பு வாக்குகளை பெறுவதற்கே மட்டுமே எனவும், பத்து ஆண்டுகளாக உழைக்காதவர்கள் இலவசங்களை அறிவித்து தேர்தலில் வெற்றி பெற விரும்புகின்றார்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.