திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சிறுநீரக தொற்று நோய் காரணமாக நேற்று காய்ச்சல் இருந்ததாக அவருக்கு சிகிசை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்ததை அடுத்து அவருடைய உடல்நலம் குறித்து பல்வேறு தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.
நேற்றிரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஒருசில அதிமுக அமைச்சர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கருணாநிதியின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளவருமான கமல்ஹாசன் நேற்று அவருடைய வீட்டிற்கு சென்றார்.
கருணாநிதியை நேரில் சந்தித்ததோடு, மு.க.ஸ்டாலினிடம் அவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 வருடங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இதனை பெருமைப்படுத்தும் வகையில் இன்று திமுகவினர் பெரும் விழாவாக கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.