திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே வருவதாகவும், இதனால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.
கடந்த 18ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. அப்போது, அவரின் உடல் நிலை குறித்து ஸ்டாலின் மருத்துவர்கள் கூறிய தகவல் அவருக்கு திருப்தியாக இல்லை எனக்கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்ற பின் தொடர்ந்து படுக்கையிலேயே இருக்கிறாராம் கருணாநிதி. படுக்கையிலிருந்து தூக்கி உட்கார வைத்தாலும், சோர்வாக இருக்கும் அவர் மீண்டும் படுத்து விடுகிறாராம். மேலும், ஸ்டாலின், செல்வி, துரை முருகன் என நெருக்கமானவர்கள் அழைத்தாலும் அவரிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை என திமுக தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை அவரின் குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதால், தொடர்ந்து அவருக்கு எப்படி சிகிச்சை அளிக்கலாம் என உறவினர்களிடம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.