உலகநாயகன் கமல்ஹாசன், தி.மு.க. ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினர் ஆன பிறகு, இன்று திடீரென பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பை மரியாதை நிமித்தமாகவே மேற்கொண்டதாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, கீழடி அகழாய்வு விவகாரத்தில் பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்தேன். அவற்றுள் தலையானது, கீழடி அகழாய்வு.
தமிழின் தொன்மையையும், தமிழர்களின் நாகரிகத்தின் பெருமையையும் உலகுக்கு உரக்க சொல்லும் இந்த முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு, பிரதமரை கமல்ஹாசன் நேரடியாக சந்தித்தது, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.