30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி வரும் சகோதரி காமர் மொஷின் ஷேக், இந்த ஆண்டு 'ஓம்' மற்றும் 'விநாயகர்' உருவம் பதித்த இரண்டு ராக்கிகளைத் தானே தயாரித்து, பிரதமரின் அழைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
காமர் மொஷின் ஷேக் என்பவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். 1981-ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் குடிபெயர்ந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மோடி தொண்டராக இருந்தபோது, ஒருமுறை அவர் நலன் விசாரித்ததிலிருந்து, இருவருக்கும் இடையே சகோதர பாசம் உருவானதாக ஷேக் நினைவு கூர்கிறார்.
அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் மோடிக்கு ஷேக் ராக்கி கட்டி வருகிறார்.கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும் தானே கையால் ராக்கிகளை தயாரித்து, அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து மோடிக்கு கட்டுவது அவரது வழக்கம்.
ஒருமுறை, மோடி குஜராத் முதலமைச்சராக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாகவும், அது நிறைவேறியவுடன், மோடி அவரிடம் அடுத்த என்ன ஆசையென்று கேட்டபோது, அவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்ததாகவும், அதுவும் இப்போது நிறைவேறிவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ராக்கி கட்டுவதற்கு டெல்லிக்குச் செல்ல முடியாத நிலையில், இந்த ஆண்டு பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று ஷேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த முறை தன் கணவருடன் டெல்லிக்கு சென்று, தான் தயாரித்த ராக்கியை பிரதமருக்கு கட்ட திட்டமிட்டுள்ளார். மோடியின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும், அவர் நான்காவது முறையாகவும் பிரதமராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.