தமிழ்நாட்டில் மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக திருத்திய மின்வாகன கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், மின் வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு, பதிவுக்கட்டணம் மற்றும் அனுமதி கட்டணத்தில் சலுகை என பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அதுபோல மாநகர போக்குவரத்திலும் முதற்கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகள் அடுத்தடுத்த கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இவ்வாறாக மாநிலம் முழுவதும் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றிற்கு சார்ஜ் செய்வது, பேட்டரி மாற்றுவது உள்ளிட்ட வசதிகளுக்காக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் பேசியபோது, “தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நகர்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட பயன்பாட்டிலும் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக பேட்டரி மாற்றும் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K