இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலை அமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது என்பதால், இங்கு ஆலை அமைத்து கார்கள் உற்பத்தி செய்ய பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் வரி அதிகம் காரணமாக பின் வாங்கியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ஆலை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், விரைவில் இந்தியாவில் டெஸ்லா தனது வர்த்தகத்தை தொடங்குவது மட்டுமின்றி, ஆலை அமைக்கும் திட்டத்திலும் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பை தவிர்ப்பதற்காகவே இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இது மிகவும் நியாயமற்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார். மின்சார வாகன தயாரிப்பில் சில அமெரிக்க நிறுவனங்கள், வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை தவறாக காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, முதல் முறையாக எலான் மாஸ்க் மற்றும் டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க எலான் மாஸ்க் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.