தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மீதான நடவடிக்கையாக 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில காலமாக தமிழக பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், பெரும்பாலும் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களே இந்த வன்கொடுமை சம்பவங்களை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுத்தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 36 வழக்குகள் பள்ளியின் வெளியே நடைபெறுவதாகவும், 11 பேர் சிறையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் உட்பட 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போக்சோ வழக்கில் 53 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. தண்டனை தீர்ப்பு உறுதியானதும் மற்றவர்களும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K