பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஆட்டோ டிரைவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் என்பவர், தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனால் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் மற்றும் சம்பவத்தை மறைத்த சிறுமியின் தாயார் மீது வழக்கு பதிவு செய்தனர். முத்துக்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார் மேல்முறையீடு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நேரில் ஆஜராகி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரையே திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முத்துக்குமாருக்கும் இடையே வயதுக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தாலும், கணவன் மனைவி என்ற உறவை தகுதி நீக்கம் செய்து விட முடியாது என்றும், முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி, 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.