தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருவதை அடுத்து, சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், புவனகிரி, சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் 10 முதல் 14 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், விருதுநகர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, திருச்சி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வெயில் அடிப்பதால், சென்னை உள்பட வட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.