திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நார்த்தாமலை அருகே, வானில் பறந்து கொண்டிருந்த ஒரு சிறிய ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலைக்கு அருகில், விமானம் தரையிறக்கப்பட்டபோது, சாலையில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால், எந்த விபத்தோ, பாதிப்போ ஏற்படவில்லை. போர் விமானத்தில் இரண்டு பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த கீரனூர் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, சாலையை சுற்றிலும் பொதுமக்கள் கூடுவதை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்வதற்காக, தஞ்சாவூர் விமான நிலையத்திலிருந்து பொறியாளர்கள் குழு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் தரையிறங்கியது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.