NPCI என்ற தேசிய பணப்பட்டுவாடா கழகம் UPI பணப்பரிவர்த்தனைகளில் உள்ள Request Money என்ற அம்சத்தை நீக்க முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அம்சம், அக்டோபர் 1, 2025 முதல் நிரந்தரமாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், ஆன்லைன் மோசடிகளை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக NPCI விளக்கமளித்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பணம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம், பணம் பெறுபவர் பரிவர்த்தனையை தொடங்கி, பணம் அனுப்புபவர் அதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுகிறது.
இந்த அம்சம் நீக்கப்பட்ட பிறகு, UPI பரிவர்த்தனைகள் பணம் அனுப்புபவர் தனது UPI பின் எண்ணை உள்ளீடு செய்து, க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது அல்லது பெறுநரின் யூபிஐ ஐடியை உள்ளிடுவது போன்ற வழிகளில் மட்டுமே பணம் அனுப்ப முடியும்.
இந்த அதிரடி முடிவானது, பண மோசடிகளுக்கு உள்ளாகும் அப்பாவி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.