தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, வடதமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் வலுக்குறையக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சற்றுமுன் சில நிமிடங்கள் மட்டும் வெயில் அடித்தது.