டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு மிக அருகே புயல் நெருங்கி உள்ளதால் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையின் சுரங்கப்பாதைகளில் தேங்கி இருந்த மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டதாகவும், கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டுமே மழை நீர் தேங்கி இருப்பதாகவும், அதையும் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை பல பகுதிகளில் மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.