மது அருந்தி மரணமடைந்த 4 பேர் ; இதனால் கொலை செய்தேன்: பெண் பகீர் வாக்குமூலம்

திங்கள், 25 ஜூன் 2018 (14:34 IST)
சிவகாசியில் மது அருந்திய நான்கு பேர் மரணமடைந்த விவகாரத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.

 
சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம் (15), முத்தாட்சி மடத்தை சேர்ந்த முருகன் மற்றும் முகமது இப்ராஹிம், சரவணன், அந்தோனி ராஜ், ஹரிஹன் என 8 பேர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தனர். குடித்துமுடித்து விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. 
 
இதில், கணேசன், முகமது இப்ராஹிம், கௌதம் ஆகியோர் நுரை தள்ளிய நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். அதேபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றவர்களில் முருகன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 
டாஸ்மாக் கடையில் காலாவதியான மது விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அந்த கடை உடனடியாக மூடப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், காலாவதியான மது விற்கப்பட்டதா அல்லது மதுவில் விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் சாப்பிட்ட உணவை பரிசோதனை செய்ததில், அதில் விஷம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் முருகனின் சகோதரி வள்ளியும், அவரின் காதலருமான செல்வம் என்பவரும் சேர்ந்துதான் உணவில் விஷத்தை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வள்ளிக்கும், செல்வத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால், இதை வள்ளியின் சகோதரர் முருகன் ஏற்கவில்லை. எனவே, தங்கள் காதலுக்கு குறுக்கே நிற்கும் முருகனை கொலை செய்யவே இந்த திட்டத்தை வள்ளி மற்றும் செல்வம் ஆகியோர் திட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 
அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 40,000 கோடி சொத்து வைத்துள்ள சுயேட்சை வேட்பாளர்