அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவை போல் அதிமுக கட்சியிலும் குடும்ப அரசியல் நிலவுவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், "திமுகவில் மட்டுமே குடும்ப அரசியல் இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், அதிமுகவிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளை ஆகியோரின் தலையீடுகள் உள்ளன என்பது நாட்டுக்கே தெரிந்த உண்மை," என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், "தன்னால் முடியாத காரியத்தை தன்னால் முடியும் என்று சொல்லித் தன்னை ஏமாற்றிக்கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது," என்றும் அவர் கூறினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் வரை இயக்கத்தின் வெற்றிக்காகவே தான் உழைத்ததாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
கட்சியின் விதிகளை மீறி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதற்காக, அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் முன்வைத்துள்ளார்.