Publish Date: Thu, 08 Jan 2026 (08:25 IST)
Updated Date: Thu, 08 Jan 2026 (08:22 IST)
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.
சமீபத்தில் அமித்ஷா தமிழகம் வந்திருந்தபோது, அவரை சந்திக்காமல் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அவசர பயணமாக டெல்லி சென்று இந்த சந்திப்பை நடத்தியுள்ளார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணியில் பாமக இணைவதை உறுதி செய்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான இடங்களை பகிர்ந்தளிப்பது குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமிஆலோசித்துள்ளார்.
குறிப்பாக, பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள் மற்றும் தேர்தல் நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்கள் இதில் முக்கியத்துவம் பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அடுத்தடுத்து எடுக்கும் இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அனல் பறக்க செய்துள்ளன.