சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், சென்னையில் உள்ள 15-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனை, இன்று அதிகாலை வரை விடிய விடிய நீடித்து, தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த சோதனையானது தங்க நகை மற்றும் இரும்பு மொத்த வியாபாரிகள் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடைபெற்றது.
முக்கியமாக, சௌகார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் முத்தா வீடு, கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் உள்ள தங்க நகை மற்றும் இரும்பு வியாபாரிகள் தொடர்புடைய இடங்கள், சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் கலைச்செல்வன் வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.
மேலும், அம்பத்தூரில் உள்ள வழக்கறிஞர் பிரகாஷ் வீட்டிலும், கோடம்பாக்கத்தில் உள்ள சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை முழுவதும் விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பொருட்கள் குறித்த எந்தவிதமான தகவலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.