அதிமுக சார்பில் தற்போது 'தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்' என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரண்டு இடங்களில் நடைபெறவிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த ஈபிஎஸ்-ஸின் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரக் கூட்டங்களுக்காக அதிமுகவினர் தேர்ந்தெடுத்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதிக்கு அருகில் இருந்ததால், காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்களைக் காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளனர்.
பிரச்சாரத்திற்கு இன்னும் ஒரு நாளே இருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுப் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகளில் ஈபிஎஸ் பிரச்சாரம் செய்யும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.