அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி" என்று தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் "கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். அடுத்தகட்ட முடிவு பற்றி இன்னும் யோசிக்கவில்லை."
"எனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் நீக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும்."
"யார் பக்கமும் எந்த எதிர்வினையும் இல்லை. என்னுடைய அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரப் பயணத்தில் கோபிசெட்டிபாளையம் வழியாக வருகிறார் என எனக்கு எந்த தகவலும் இல்லை" என்று அவர் கூறினார்.
அதிமுகவில் தற்போது குழப்பமான சூழல் இருந்து வரும் நிலையில், தனது நிதானமே வெற்றிக்கு வழி என்று செங்கோட்டையன் கூறியிருப்பது, அவரது அடுத்த அரசியல் நகர்வுகளுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.